காந்தி, சாஸ்திரி நினைவிடங்களில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி
மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களின் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா, மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் 115வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டிற்கும், சாஸ்திரியின் நினைவிடமான விஜய்காட்டிற்கும் பிரதமர் நரேந்திர மோடி சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதே போல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும் காந்தி, சாஸ்திரி நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதன்பிறகு, நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.