சிதம்பரம் ஜாமீன் மனு.. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்.. நாளை விசாரிக்கப்படுமா?

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் தனக்கு ஜாமீன் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து அவரது சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரபல வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் அவருக்காக வாதாடினர்.

மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் கைத், சிதம்பரத்திற்கு ஜாமீன் அளிக்க மறுத்தார். ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சிதம்பரம் முக்கியப் பதவியில் இருந்தவர். எனவே, செல்வாக்கு மிக்க அவர், சாட்சியங்களை கலைத்து விட வாய்ப்புள்ளது. அவருக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி திங்கட்கிழமை முதல் சுப்ரீம் கோர்ட்டுக்கு தசரா விடுமுறை துவங்குகிறது. எனவே, அதற்கு முன்பாக சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் முன்பாக சீனியர் வக்கீல் கபில்சிபல் கோரிக்கை விடுத்தார். இது பற்றி, தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி என்.வி.ரமணா பதிலளித்தார்.

இதனால், நாளை அல்லது நாளை மறுநாள் இம்மனு விசாரிக்கப்படுமா என்பது குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் முடிவு செய்யவுள்ளார்.

More News >>