டெல்லி உள்பட முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.. தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி..
காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கப் போவதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான முனையம் உள்பட நாடு முழுவதும் 30 முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இப்பிரச்னை சர்வதேசப் பிரச்னையாக்குவதற்கு முயன்று தோற்றது. இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக, அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தூண்டி விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஜெய் இ முகமது தீவிரவாத இயக்கத்தில் இருந்து ஷாம்ஷெர் வானி என்பவன் பெயரில் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பழிவாங்கப் போவதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் 30 விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.