இந்திய அணிக்கு ldquoவெற்றி மேல் வெற்றிrdquo
இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்று மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறது, டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், அதன்மூலம் பாடம் படித்த இந்திய அணி, ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது, அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் இன்று தொடங்கியது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் 20-20 கிரிக்கெட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. ரோஹித் சர்மா முதல் ஓவரை அதிரடியாக ஆரம்பித்தார், அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் பறந்தன. ஆனால் துரதிஷ்டவசமாக அடுத்த ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார், அவர் 9 பந்துகளில் 21 ரன்கள் விளாசியிருந்தார்.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்த சுரேஷ் ரெய்னா மூன்றாவது வீரராக களம் இறங்கினார், அவரும் மூன்றாவது ஓவரில் தனது சிக்ஸர் கணக்கை தொடங்கினார், அவரும் எல்லா பந்துகளையும் அடிக்க நினைத்து, 7 பந்துகளில் 15 ரன்களுடன் வெளியேறினார். பின்னர் அணி தலைவர் விராட் கோலி களமிறங்கினார், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும், மறுமுனையில் தொடக்க வீரர் ஷிகர் தவான் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தால், அணியின் ஸ்கோரை குறையாமல் பார்த்துக்கொண்டார்.
பவர் பிளேயில் இரண்டாவது ஓவரை தவிர, ஐந்து ஓவர்களில் பத்து ரன்களுக்கு மேல் விளாசிய இந்திய அணி (8 பௌண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட) 78 ரன்களை குவித்தது. தவான் 11 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது, கையுறையில் உரசி சென்று கீப்பரிடம் தஞ்சமடைந்த பந்துக்கு நடுவரால் உதிரி ரன் வழங்கப்பட்டது. யாரும் ரிவ்யூ கேட்காததால் தப்பினார். அதுபோல் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த வீராட் கோலி 10 ரன்கள் எடுத்திருந்தபோது, கொடுத்த எளிதான கேட்ச்சை பெகார்டியன் கோட்டை விட்டார். அதன்பிறகு விரைவாக ரன் குவிக்க தொடங்கிய கோலி, 26(20) ரன்களில் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 9-வது ஓவரில் நூறு ரன்களை கடந்தது, தவான் 27 பந்துகளில் 50 ரன்களை கடந்தார், அவருக்கு இது நான்காவது அரைசதம் ஆகும். ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை ஷிகர் தவான் நாலாபக்கமும் சிதற விட்டார். 15-வது ஓவரில் இந்திய அணி 150 ரன்களை கடந்தது, தவான் 72 ரன்கள் அடித்திருந்த நிலையில், பந்தை பின்னால் தூக்கி அடிப்பதாக நினைத்து, கீப்பரிடம் தூக்கி கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 10 பௌண்டரி 2 சிக்ஸர் உள்பட 72 ரன்கள் எடுத்தார். பின்னர் மனீஷ் பாண்டேவுடன் இணைந்து மகேந்திரசிங் டோனி நிதானமாக ஆடினார். ரசிகர்கள் கோரஸாக "டோனி...டோனி...." என கத்தி அவரை உற்சாகப்படுத்த, அவரும் அடித்தாடலாம் என நினைத்து, மோரிஸின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். டோனி தன் பங்குக்கு 16(11) ரன்களுடன் நடையை கட்டினார்.
பின்னர் வந்த பாண்டியா அதே ஓவரில் 2 பௌண்டரிகளை ஓட விட்டு மோரிஸை பதம் பார்த்தார். கடைசி ஓவரை பீட்டர்சன் கட்டுக்கோப்பாக வீசினார். பாண்டியா-பாண்டே ஜோடியால் அந்த ஓவரில் எல்லைக்கோட்டை தாண்டி ரன் அடிக்க முடியவில்லை. இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அந்த மண்ணில் இந்திய அணி அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். பாண்டே 29(27), பாண்டியா 13(7) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் நம் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஸ்ட்ரைக் ரேட் 100-க்கு மேல் வைத்திருந்தனர் என்பது கூடுதல் தகவல்.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது, அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் ரீஷா ஹென்ரிக்ஸ் 70(50) ரன்கள் எடுத்து போராடிப் பார்த்தார். புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
டிவில்லியர்ஸ், ஆம்லா, டீ காக், டூ பிளஸ்ஸிஸ், ரபடா, பிளாண்டர், ஸ்டெயின், மோர்கல் போன்ற ஜாம்பவான்கள் இல்லாமல், பாதிக்கும் அதிகமான புதுமுகங்கள் கொண்ட அணியாக இருப்பதால், அனுபவ இந்திய அணியுடன் போராட முடிந்ததே தவிர வெல்ல முடியவில்லை, மேற்கூறிய வீரர்களில் ஒருசிலர் அணியில் இருந்தாலே இந்திய அணியின் தொடர் வெற்றி நிச்சயம் கேள்விக்குறிதான். அது நடக்க வாய்ப்பும் இல்லை, இருப்பினும் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் இருப்பதால் காலரை தூக்கி விட்டுக் கொள்வோம்.