கேரள ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக எஸ்.மணிக்குமார் நியமனம்
கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஜே.கே.மகேஸ்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில் 2வது மூத்த நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சாமித்துரையும் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2006ம் ஆண்டில் கூடுதல் நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பொறுப்பேற்றார்.
பின்னர், 2009ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீர்நிலை ஆக்கிரமிப்பு, கட்டாய ஹெல்ெமட் பல்வேறு பொது பிரச்னைகளில் பல முக்கிய உத்தரவுகளை நீதிபதி எஸ்.மணிக்குமார் பிறப்பித்திருக்கிறார்.
தற்போது, இவரை கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரைத்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ்.மணிக்குமாரை நியமனம் செய்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இதே போல், ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.கே.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பின்பு, புதிய ஆந்திர ஐகோர்ட், அமராவதியில் துவங்கப்பட்டது. அந்த ஐகோர்ட்டில் இது வரை பொறுப்பு தலைமை நீதிபதி சாகரி பிரவீன்குமார் தலைமையில் 13 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
மாநிலத்தின் முதலாவது தலைமை நீதிபதியாக ஜே.கே. மகேஷ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள ஐகோர்ட்டில் 2005ம் ஆண்டில் நீதிபதியாக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.