பிரதமரைப் பற்றி யார் பேசினாலும் சிறையில் தூக்கிப் போடுவார்கள்.. ராகுல் கடும் தாக்கு..

பிரதமரைப் பற்றி யார் பேசினாலும் அவர்கள் சிறையில் தூக்கிப் போடப்படுகிறார்கள். நம் நாடு சர்வாதிகார நாடாக போய் கொண்டிருக்கிறது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

கேரள மாநிலம், வயநாடு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வயநாடு மக்கள் போராடி வருகின்றனர். வனப்பகுதியில் விலங்குகள் பாதிக்கப்படக் கூடாது என்று இந்த தடையை கர்நாடக அரசு கொண்டு வந்தது. இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இந்த சாலையை இரவில் மூடுவதால், அந்த சாலையை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு மக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவதற்காக வயநாடு தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று வந்தார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு புறப்பட்ட ராகுலிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, சிறுபான்மையினர் தாக்கப்படுவது குறித்து பிரதமருக்கு பகிரங்க கடிதம் எழுதிய மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது குறித்து ராகுலிடம் கேட்டனர்.

அதற்கு அவர், நாட்டில் இப்போது என்ன நடக்கிறது? பிரதமரைப் பற்றி யார் பேசினாலும் அவரை தூக்கி சிறையில் போடுவார்கள். இன்றைக்கு உள்ள ஆட்சியாளர்கள் ஒரே தலைவர், ஒரே மதம், ஒரே கொள்கை என்று செயல்படுகிறார்கள். எதிர்கருத்து சொல்பவர்கள் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்படுகிறது. நம் நாடு சர்வாதிகார நாடாக மாறி வருகிறது என்றார்.

இதற்கிடையே, பிரதமருக்கு பகிரங்க கடிதம் எழுதியவர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், எங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு அடிப்படை இல்லாதது. பேச்சு சுதந்திரத்தைப் பறிப்பதாகும். எப்படி இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்பது புரியவில்லை என்றார்.

More News >>