மெட்ரோ ரயில் பணிமனை கட்ட 2600 மரங்களை வெட்டுவதா? மும்பையில் நள்ளிரவில் மறியல்..

மும்பை ஆரே காலனியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனால், விடிய, விடிய அப்பகுதியில் பதற்றம் காணப்பட்டது.மகாராஷ்டிர மாநிலம், மும்பை புறநகரில் சஞ்சய்காந்தி இயற்கைப் பூங்கா என்ற மிகப்பெரிய வனம் உள்ளது. இதையொட்டி, ஆரே காலனி என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக 2,600 மரங்களை வெட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சமூக ஆர்வலர் ஜோரு பத்தனா என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆரே காலனி உள்ள 2,280 ஹெக்டேர் நிலங்களையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, மரங்கள் வெட்ட தடை விதிக்க வேண்டுமென்று கோரியிருந்தார். இம்மனுவை தலைமை நீதிபதி பிரவீன் நந்தரஜோக் தலைமையிலான பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் மெட்ரோ ரயில் ஊழியர்கள், போலீசாருடன் வந்து நள்ளிரவு 12 மணியளவில் ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குவிந்தனர். அவர்களை வர விடாமல் போலீசார் தடுப்புகளை அமைத்தனர். ஆனால், அதை தள்ளிக் கொண்டு மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், நள்ளிரவில் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், நள்ளிரவில் 200 மரங்களை வெட்டி போட்டு விட்டனர். மொத்தம் 2,702 மரங்களை வெட்டப் போவதாகவும், அதில் 464 மரங்களை வேறொரு இடத்தில் நடவிருப்பதாகவும் கூறுகின்றனர். இயற்கையை அழித்தால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். ஆதிவாசி மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

More News >>