பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சென்னை வாலிபர்கள் கைது..
சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மாங்காடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சினிமாவில் வருவது போல் ரவுடிகள் கூட்டமாக கூடி, பினு என்ற ரவுடியின் பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது பினு பெரிய பட்டாக்கத்தியால் கேக் வெட்டினார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து முன்கூட்டியே போலீசாருக்கு தெரிந்து விட்டதால், அவர்களை சுற்றி வளைத்தனர். சிலர் தப்பினர். பல ரவுடிகள் சிக்கினர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பின்னர், பெங்களூரு, கோவை உள்பட பல ஊர்களில் பட்டக்கத்தி, வீச்சரிவாள் போன்றவற்றை கொண்டு கேக் வெட்டுவது போன்ற செயல்களில் உள்ளூர் ரவுடிகள் ஈடுபடுகின்றனர். கடந்த வாரம், பட்டாக்கத்தியால் ரவுடிகள் கேக் வெட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது காவல் துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு செல்லவே, போலீசார் விசாரணை நடத்தி, மூன்று வாலிபர்களை கைது செய்தனர்.
சென்னை புரசைவாக்கம் சரவண பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஐயப்பன்(24) என்று இளைஞர்தான் பிறந்த நாள் கொண்டாடியவர். ஒரு மோட்டார் பைக்கில் கேக்கை வைத்து பட்டாக்கத்தியால் இவர் வெட்ட, இவரது நண்பர்கள் சாமுண்டீஸ்வரன் என்கிற சாம்(23), சரத்குமார் (22) ஆகியோர் அருகில் நின்று கைதட்டினர்.
வீடியோவில் இருந்த இந்த மூவர் மீதும் பொது மக்களிடம் அச்சம் விளைவிப்பது, பொது இடங்களில் இடையூறு விளைவிப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து ஐயப்பன், சாமுண்டீஸ்வரன் மற்றும் சரத்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தார். இவர்களில் ஐயப்பன் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.