நீதித்துறையில் சீர்கேடுகள்.. தானே சுட்டுக் கொண்ட நீதிபதி.. தாய்லாந்தில் பரபரப்பு சம்பவம்

தாய்லாந்து நாட்டில் ஒரு நீதிபதி தீர்ப்பு கூறியதும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிகிச்சைக்குப் பின், அந்த நீதிபதி பிழைத்து கொண்டார்.

தாய்லாந்தில் பணக்காரர்களும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் பெரிய குற்றத்தில் ஈடுபட்டாலும் தப்பி விடுகிறார்கள். ஆனால், சாதாரண மக்கள் சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும் கடும் தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்று மக்களிடையே பேசப்படுகிறது. (பல நாடுகளில் இப்படித்தான்) இந்நிலையில், நீதித்துறையின் சீர்கேடுகளை சுட்டிக் காட்டி நீதிமன்றத்திற்குள்ளேயே ஒரு நீதிபதி தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.

தெற்கு தாய்லாந்தில் யாலா நீதிமன்றத்தில் நீதிபதி கானகோர்ன் பியான்சனா ஒரு வழக்கில் நேற்று தீர்ப்பு கூறினார்.

துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 5 முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்களை விடுதலை செய்து நீதிபதி பியான்சனா தீர்ப்பு கூறினார். அப்போது அவர் கூறுகையில், நீதித்துறையின் சீர்கேடுகளை களைந்து சுத்தப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வழக்கிலும் வெளிப்படையாக விசாரணை நடத்தி, நம்பக் கூடிய ஆதாரங்களை கொண்டு வர வேண்டும். நீங்கள்(விசாரணை ஏஜென்சி) ஒரு வழக்கில் உறுதியாக இல்லாவிட்டால், யாரையும் தண்டிக்காதீர்கள். இந்த வழக்கில் 5 பேரும் குற்றமே புரியவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். அவர்கள் செய்திருக்கலாம். ஆனால், விசாரணை என்பது வெளிப்படையாகவும், நம்பக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களை பலியாடுகளாக ஆக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.

நீதித்துறையின் சீர்கேடுகளை சுட்டிக் காட்டிய நீதிபதி பியான்சனா, தாய்லாந்து அரசரின் படத்திற்கு முன்பாக நின்று சட்டத்தைக் காப்பதாக உறுதி ஏற்றார். பிறகு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டார். அவர் தீர்ப்பு கூறும் காட்சிகள் வரை அவரது மொபைல் மூலம் பேஸ்புக்கில் நேரலையாக காட்டினார்.

துப்பாக்கிச் சூட்டை பார்த்ததும் அனைவரும் ஓடி வந்து அவரை தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் உயிர் பிழைத்து கொண்டார். அந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட 5 பேருக்கு எதிராக அரசு தரப்பு மேல்முறையீடு செய்கிறதா என்பதை உறுதி செய்த பின்புதான் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

More News >>