பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்ததற்கு காற்று மீதுதான் கேஸ் போடனும்.. பொன்னையன் பேச்சால் சர்ச்சை..

இவரை எல்லாம் எப்படி எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அமைச்சராக வைத்து அழகு பார்த்தார்கள்?

ஜெயலலிதா இருக்கும் வரை அவர் பறந்த ஹெலிகாப்டரை தரையில் விழுந்து வணங்கியவர்கள் அதிமுக அமைச்சர்கள். அவர் சொன்னால் தங்களைத் தாங்களே முட்டாள் என்று சொல்லிக் கொள்ளக் கூட தயங்காதவர்கள். ஆனால், ஜெயலலிதா என்றைக்கு மரணம் அடைந்தாரோ அது முதல் அதிமுகவினரின் பேச்சுகளை மக்கள் சகிக்க முடியவில்லை.

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு போன்றவர்கள் பேசி வருபவை மக்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது என்று சொல்லலாம்.

அதனால்தான், திண்டுக்கல் சீனிவாசன் 2016ம் ஆண்டில் வெற்றி பெற்ற திண்டுக்கல் சட்டசபைத் தொகுதியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை விட திமுக 83,374 வாக்குகள் அதிகமாக பெற்றது. அதே போல், செல்லூர் ராஜுவின் மதுரை மேற்கு தொகுதியில் திமுக 26,614 வாக்குகளும், ராஜேந்திரபாலாஜியின் சிவகாசி தொகுதியில் திமுக 37,705 வாக்குகளும் அதிகமாக பெற்றது.

ஆனாலும், அமைச்சர்கள் யாரும் திருந்தியபாடில்லை. இந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் முன்னாள் அமைச்சர் பொன்னையன். அதிமுக பேனர் விழுந்து கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுபஸ்ரீ இறந்த சம்பவம் நடந்து சில நாட்களே ஆன நிலையில், அது குறித்து அவர் அடித்த கமென்ட் மிகவும் கொடூரமானதாகி விட்டது. அவர், நியூஸ் 7 தொலைக்காட்சி நெறியாளர் இரா.விஜயனுக்கு அளித்த பேட்டியில், காற்று அடிச்சு பேனர் விழுகிறது... பேனர் வைச்சவரா போய் தள்ளி விட்டு கொன்னாரு... கேஸ் போடனும்னா காத்து மேலதான் கேஸ் போடனும்... என்று பதிலளித்திருக்கிறார். இந்த இரண்டு நொடி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி விட்டதுடன், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அந்த விமர்சனங்களில் ஒன்றுதான் இந்த செய்தியின் ஆரம்ப வரிகள்.

More News >>