நான் ஹீரோவெல்லாம் கிடையாது.. பட்லர் பாலு கம்பெனி மீது யோகிபாபு பாய்ச்சல்..
நடிகர் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் எஸ்.பி. ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்றும் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக யோகிபாபு கூறும்போது, "தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன்.
அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். பட்லர் பாலு என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன்.
ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் தகவல் பரப்புகிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இயக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி" என்றார்.