தெலங்கானாவில் 48 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர் டிஸ்மிஸ்.. முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி..

தெலங்கானாவில் தங்களை அரசு ஊழியர்களாக்கக் கோரி, ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 48 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து அதிரடி காட்டியுள்ளார் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.

தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்(கே.சி.ஆர்) தலைமையில் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு கடந்த நான்கைந்து நாட்களாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டது போல், தங்களையும் அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டுமென்றும், ஊதிய உயர்வு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறுகிறது. மொத்தம் 49,340 பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போராடுபவர்கள் பணிக்கு வருவதற்கு நேற்று(அக்.6) மாலை வரை அவகாசம் தரப்பட்டது. பணிக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர், நேற்று மாலையில் சந்திரசேகரராவ் தலைமையில் அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில், சந்திரசேகர ராவ் கூறியதாவது:

பணிக்கு வராத 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கே இடமில்லை. அரசு போக்குவரத்து கழகம் ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது. எனவே, எந்த கோரிக்கையும் ஏற்கப்படாது. தற்போது 1200 ஊழியர்களே உள்ளனர். எனவே, அரசு 2500 தனியார் பஸ்களை லீசுக்கு எடுத்து மக்களுக்காக இயக்கும். மேலும், அரசு தனியார் கூட்டாக சேர்ந்து 4114 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலத்தில் அரசு தனியார் இணைந்து போக்குவரத்து கழகத்தை நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 2001-06ம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர். அப்போது, பல ஆயிரம் ஊழியர்களை ஜெயலலிதா அரசு டிஸ்மிஸ் செய்தது. பின்னர், அந்த ஊழியர்கள் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி மீண்டும் பணியில் சேர்ந்தனர். அதிலும் போராட்டத்தை தூண்டி விட்ட சங்கத் தலைவர்களால் மீண்டும் பணிக்கு சேரவே முடியவில்லை. 

More News >>