திமுக எம்.எல்.ஏ. மீது பாஜக பிரமுகர் டிஜிபியிடம் புகார்
திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. மீது பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி, டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.
திருச்சி லலிதா ஜுவல்லரியில் முகமூடி கொள்ளையர்கள் ரூ.13 கோடி மதிப்புடைய தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர். போலீசார் அதிவேகமாக புலன் விசாரணை செய்ததில், திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கொள்ளையனும், அவனது கூட்டாளிகளும் சிக்கினர். கொள்ளையன் மணிகண்டன் புகைப்படம் வெளியானதுமே அவனை பல்வேறு கட்சித் தலைவர்களுடன் இருப்பது போல ஒட்டி மீம்ஸ்கள் வெளியாகின.
இந்நிலையில், மணிகண்டனை பாஜகவைச் சேர்ந்தவர் என்று ஒருவர் ட்வீட் போட அதை திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவின் மகனும், எம்எல்ஏவுமான டி.ஆர்.பி.ராஜா ரீட்விட் செய்தார். அதில், பாஜகவினருக்கு வேறு தொழில் ஏது என்றும் கமென்ட் போட்டார். இதையடுத்து, பாஜக செய்திதொடர்பாளர் நாராயணன் திருப்பதி இது பற்றி டிஜிபிக்கு புகார் அனுப்பியுள்ளார். அதில் அவர், மணிகண்டன் பாஜகவைச் சேர்ந்தவர் என்று ஒருவர் போட்ட ட்விட்டை திமுக எம்எல்ஏ. ராஜா, ரீட்விட் செய்துள்ளார். கொள்ளை வழக்கில் கைதான மணிகண்டன் பாஜகவைச் சேர்ந்தவரே அல்ல. டிடிவி திவாகரனுடைய கட்சியைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்று சமூக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
ஆனால், திமுக எம்எல்ஏ வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திட்டமிட்டு பாஜகவை களங்கப்படுத்தும் வகையில் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டிருக்கிறார். இதன்மூலம், இருகட்சிகளுக்கும். இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கி, சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.