முதல் ரபேல் போர் விமானம்.. இந்தியாவிடம் ஒப்படைப்பு.. சந்தனம், குங்குமம் வைத்து பூஜை..
முதலாவது ரபேல் போர் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று(அக்.8) அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டார்.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. டசால்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும் இந்து ஆங்கில நாளிதழில் என்.ராம் எழுதி வந்தார். இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.இந்நிலையில், முதலாவது ரபேல் போர் விமானத்தை அதிகாரப்பூர்வமாக பெறுவதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு புறப்பட்டு சென்றார்.
பிரான்சில் முதலாவது ரபேல் போர் விமானத்தை இன்று(அக்.8) அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் பேசுகையில், இன்று இந்தியா-பிரான்ஸ் நாடுகளின் உறவில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளோம்.
முதலாவது ரபேல் போர் விமானம் திட்டமிட்டப்படி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது எங்கள் விமானப்படைக்கு மேலும் பலத்தை அளிக்கும். ரபேல் விமானத்தின் செயல்பாடுகளை காண்பதற்கு ஆர்வமாக இருக்கிறோம். இந்தியா, பிரான்ஸ் இடையே அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்றார்.
இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்ட ரபேல் விமானத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து, டயர்களுக்கு கீழே எலுமிச்சைப் பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது.
ரபேல் விமானத்தின் மீது தேங்காய் வைத்து, முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் ராஜ்நாத்சிங் எழுதினார்.