நாசரேத் டாஸ்மாக் கடையில் அலைமோதிய திடீர் கூட்டம்

நாசரேத் டாஸ்மாக் மதுபானக் கடையில் 2 நாட்களாக குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது.

திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா மிகவும் பிரபலம். மைசூரு தசரா விழாவுக்கு அடுத்தபடியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டு வந்து குலசை தசரா விழாவில் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு குலசை தசரா திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற திருவிழாவில் நேற்று முன்தினம்(8ம் தேதி) நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் மட்டுமே 8 லட்சம் பக்தர்கள் திரண்டதாக மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், குலசை தசரா திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. ஆனால், குடிமகன்களுக்கு ஆன்மீகத் திருவிழாவானாலும் குடிக்காமல் இருக்க முடியாதே? அதனால், அக்கம் பக்கம் எங்கு டாஸ்மாக் கடையைத் தேடத் தொடங்கினர். அருகில் உள்ள நாசரேத், ஏரல்தாலுகாவிற்கு உட்பட்டது என்பதால் அங்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. இதையடுத்து, கடந்த 2 நாட்களாக நாசரேத் பஸ் ஸ்டாண்ட் மதுபானக் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், போலீசார் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தி நீண்ட வரிசையில் நிற்க வைத்தனர். கூட்டம் காரணமாக இரவு 10 மணிக்குப் பிறகும் டாஸ்மாக் கடை திறந்து வைத்திருக்க அங்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. நாசரேத் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளில் தீபாவளி, புத்தாண்டு விற்பனையை விட இப்போதுதான் மதுபான விற்பனை அதிகம் என்று கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், தசரா திருவிழா, தீபாவளி போன்றவை காரணமாக இந்த மாதம், தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபான விற்பனை அதிகமாக இருக்கும் என்றார்.

More News >>