டென்மார்க் செல்ல கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது ஏன்?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டென்மார்க் செல்ல மத்திய அரசு அனுமதி தர மறுத்தது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்த நிலையில், அனுமதி மறுப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது.

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் சி-40 பருவநிலை மாறுபாடு தொடர்பான சர்வதேச மாநாடு, கடந்த 9ம் தேதி தொடங்கியது. வரும் 12-ம் தேதி வரை இ்ம்மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், 8 பேர் குழுவுடன் கடந்த 8ம் தேதி டென்மார்க் செல்லவிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு அனுமதி தர மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்து விட்டது.

மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் அரசு முறைப் பயணமாக வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால், மத்திய அரசின் அனுமதி கட்டாயமாகும். கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவரது பயணம் ரத்தானது. மத்திய அரசு மற்ற மாநில முதல்வர்கள், அமைச்சர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி கொடுத்து விட்டு, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுத்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள, பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று(அக்.9) கூறுகையில், டென்மார்க்கில் நடைபெறுவது சி-40 பருவநிலை மாறுபாடு தொடர்பான மேயர்கள் மாநாடு. இந்த மாநாட்டில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தலைநகரின் முதலமைச்சர் கலந்து கொள்வது சரியாக இருக்காது. மேயர்கள்தான் கலந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் பங்கேற்பது நாட்டுக்கு பெருமை சேர்க்காது என்பதால், அவர் அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம், மேற்கு வங்க அமைச்சர் பர்ஹத் ஹக்கீம் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

இது குறித்து ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் கூறுகையில், மத்திய அரசு வேண்டுமென்றே தான் அனுமதி மறுத்துள்ளது. முதல்வருக்கு பெருமை சேர்க்காது என்று இப்போது சொல்கிறார்கள். ஆனால், டெல்லி அரசுக்கு எந்த அதிகாரமும் தராமல், முதல்வரை கவுன்சிலர் போல்தானே பாஜக அரசு நடத்தியது? டெல்லியில் ஒற்றை, இரட்டை இலக்க எண் அடிப்படையில் வாகனங்களின் இயக்கத்தை குறைத்ததன் மூலம் காற்று மாசு 25 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி மாநாட்டில் விளக்கமாக உரையாற்ற கெஜ்ரிவால் திட்டமிட்டிருந்தார். இது பிடிக்காமல் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர்என்றார்.

More News >>