பிரதமருடன் ராமதாஸ் திடீர் சந்திப்பு.. பேரறிவாளன் விடுதலைக்கு கோரிக்கை
பிரதமர் நரேந்திர மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாஸ் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தார். அவருக்கு இன்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 11.30 மணிக்கு பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் சந்தித்து பேசினர்.
தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங்க் சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. இந்த வரலாற்று சந்திப்புக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்ததற்காக பிரதமருக்கு ராமதாஸ் நன்றி தெரிவித்தார். தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம் பேசிய ராமதாஸ், ஒரு கோரிக்கை மனுவையும் அளித்தார்.
அந்த மனுவில், கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. மேலும், கோதாவரி-காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பிரதமரிடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தோம். காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்றுமாறும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்றும் கோரியிருக்கிறோம்”என்று தெரிவித்தார்.