மோடி - ஜின்பிங்க் விருந்தில் நடிகர் ரஜினியும் பங்கேற்பு.. மத்திய அரசு அழைப்பு விடுத்தது..

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங்க் விருந்தில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கின் வரலாற்று சந்திப்பு நாளை(அக்.11) மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. நாளை பகல் 1.30 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங்க், சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார். விமான நிலையத்திலேயே அவருக்கு பாரம்பரியமான முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து பகல் 1.55 மணிக்கு, கிண்டியில் உள்ள தாஜ் ஓட்டலுக்கு செல்கிறர். அங்கு மதிய உணவு சாப்பிட்டு ஓய்வு எடுக்கிறார். மாலை 4.10 மணிக்கு ஜின்பிங், காரில் மாமல்லபுரம் புறப்படுகிறார். மாலை 5 மணிக்கு மாமல்லபுரம் வந்து சேரும் ஜின்பிங்க்கை அர்ஜுனன் தபசு பகுதியில் பிரதமர் மோடி வரவேற்கவுள்ளார்.

அர்ஜுனன் தபசு பகுதியில் பார்வையிடும் ஜின்பிங்க்கிடம் பிரதமர் மோடி, மாமல்லபுரத்தின் சிறப்புகள் குறித்து விளக்குவார். அடுத்து, வெண்ணை திரட்டி பாறைக்கு நடந்து செல்கின்றனர். அடுத்து ஐந்து ரதம் பகுதியை பார்வையிட்டு விட்டு, கடற்கரை கோயிலை வந்தடைகின்றனர். அங்கு கலாஷேத்ரா சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கடற்கரை கோயிலின் புல்தரையில் அமர்ந்து இரு தலைவர்களும் உரையாடுகின்றனர். இரவு 8 மணிக்கு அங்கேயே சாப்பிடுகின்றனர். இதையடுத்து, சென்னை ஓட்டலுக்கு திரும்பி செல்கின்றனர். நாளை மறுநாள் காலை 9.40 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஓய்வு விடுதிக்கு பிரதமர் மோடியும், சீன அதிபரும் செல்கின்றனர். அங்கு இருதரப்பு அதிகாரிகளும் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அங்கேயே மதிய உணவு சாப்பிட்டு விட்டு, சென்னை திரும்புகின்றனர். பின்னர், சீன அதிபர் ஜின்பிங்க் சீனாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதற்கிடையே, மாமல்லபுரத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை காண்பதற்கு நடிகர் ரஜினிகாந்த்துக்கு மத்திய அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு கடற்கரை கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சேர்ந்து அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் நிகழ்ச்சிக்குத்தான் ரஜினியை அழைத்துள்ளனர். மேலும், சீன அதிபருக்கு மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்கவும் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

More News >>