பேயாக நடிக்கும் தமன்னாவுக்கு பேய் பயமா?.. அவரே சொன்ன பதில்..
தேவி, தேவி 2 படங்களில் நடிகையின் ஆவி ஒன்று உடலுக்குள் புகுந்ததுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா மீண்டும் பெட்ரோமாக்ஸ் என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பேய் படத்தில் தொடர்ந்து நடிப்பதை நானும் விரும்பவில்லை. ஆனால் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அனந்த பிரம்மோ மற்ற பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும். இது காமெடி பேய் படம்.
கண்ணே கலைமானே, சைரா நரசிம்ம ரெட்டி என சீரியஸ் படங்களில் நடித்ததால் ஒரு காமெடி படத்தில் வித்தியாசத்துக்காக நடித்தேன். பேய் பயம் இருக்கிறதா என்கிறார்கள். சிறுவயதில் பயம் இருந்தது இப்போது பேய் பயம் கிடையாது.
வைதேகி காத்திருந்தால் படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி - செந்தில் காமெடியில் பெட்ரோமாக்ஸ் பற்றி வரும் காமெடி பற்றி இப்பட இயக்குனர் ரோகின் விளக்கினார். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. படத்துக்கு பெட்ரோமாக்ஸ் பெயர் வைத்ததற்கு அந்த காமெடியும் ஒரு காரணம். என்னதான் பெட்ரோமாக்ஸ் என பெயர் வைத்திருந்தாலும் இதுவரை நான் பெட்ரோமாக்ஸ் விளக்கை பார்த்ததே இல்லை.இவ்வாறு தமன்னா கூறினார்.
ஹீரோக்களுக்கு டைட்டிலுக்கு மேல் அவர்களின் பெயர்களை போடுவதைப்போல் இப்படத்துக்கு தமன்னா நடிக்கும் என்று எனது பெயரை போஸ்டரில் போட்டிருக்கிறார்கள். இதுபோல் என் பெயரை நான் பார்ப்பது முதல்முறை என்றாலும் என் ஒருத்தியால் மட்டுமே இந்த படம் உருவாகிவிடவில்லை. இதில் நடித்த மற்றவர்களுக்கும் இதில் பங்கு உண்டு. அவர்களில் ஒருத்தியாகத்தான் நான் நடித்திருக்கிறேன். எனவே இது அனைவருடைய படம் தான்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும்தான் நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி ஒரு வட்டத்தில் சிக்க மாட்டேன். எல்லா விதமான படங்களிலும் நடிக்க தான் விருப்பம். பிரபலமான ஒருவரின் வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதிலும் ஸ்ரீதேவியின் வாழ்க்கை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன். சமீகாலமாக ஹீரோ, ஹீரோயின் என்ற பாகுபாடு குறைந்து வருகிறது. ஹீரோக்களுக்க நிகராக ஹீரோயின்களும் உழைக்கின்றனர்.
இவ்வாறு தமன்னா கூறினார்.