ரவுடியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய காவல் ஆய்வாளர்!

சேலம் மாநகரத்தில் ரவுடியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய காவல் ஆய்வாளரின் செயல் சேலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையின் ரவுடி பினு தனது பிறந்த நாளை பூந்தமல்லியில் கோலாகலமாக கொண்டாட சென்றபோது, அதில் கலந்துகொண்ட 200 மேற்பட்ட ரவுடிகளை காவல் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். ஒரே நேரத்தில் இத்தனை ரவுடிகளை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், சேலம் மாநகரம் கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கருணாகரன். இவர் சட்ட விரோதமாக பல கிரிமினல் நபர்களிடம் பழகி வந்துள்ளார். இதன் வெளிப்பாடாக கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ரவுடி சுசீந்தரன் பிறந்த நாளை கேக் வெட்டி அவனுக்கு ஊட்டி விட்டுள்ளார்.

இதனை ஒருவர் படம் பிடித்து மேல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். ரவுடி சுசீந்தரன் மாநகரத்தில் பல்வேறு கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபட்டுள்ளவன். இவனின் பிறந்த நாளில் காவல் ஆய்வாளரே கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது பற்றி, சேலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த தகவல் மாநகர காவல் ஆணையர் சங்கருக்கு தெரியவந்ததை அடுத்து, ஆய்வாளர் கருணாகரனை காத்திருப்போர் பட்டியலில் வைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், கருணாகரனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

More News >>