சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் மாரடைப்பால் மரணம்

பிரபல இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் இன்று(அக்.11) காலை மங்களூரு மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 69.

சாக்சபோன் இசையில் சிறந்த கலைஞராக விளங்கிய கத்ரி கோபால்நாத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 10ம் தேதியன்று மங்களூருவில் உள்ள ஏ.ஆர்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை 4.45 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

அவருக்கு சரோஜினி என்ற மனைவியும், குருபிரசாத கத்ரி, மணிகாந்த் கத்ரி என்ற மகன்களும், அம்பிகா மோகன் என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் குருபிரசாத கத்ரி தற்போது குவைத்தில் உள்ளார். அவர் வந்த பிறகு கோபால்நாத் இறுதிச் சடங்குகள் நடைபெறும். தற்போது மக்கள் அஞ்சலிக்காக மங்களூரு டவுன் ஹாலில், கோபால்நாத் உடல் வைக்கப்பட்டுள்ளது.

கத்ரி கோபால்நாத், தட்சிண கன்னட பகுதியில் பந்த்வால் தாலுகாவில் சாஜிபா மூடா என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் தந்தை தனியப்பா, நாதஸ்வரக் கலைஞர். கத்ரி கோபால்நாத் சிறுவயதிலேயே சாக்சபோனில் ஆர்வம் கொண்டு கற்றார். சாக்சபோன் இசையில் சிறந்த கலைஞராக பிரபலமான கத்ரி கோபால்நாத், பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் கிடைத்தன. கர்நாடகாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெரும்பாலும் சென்னையில் இருந்து ஏராளமான கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். அமெரிக்கா, கனடா உள்பட பல வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறார். இயக்குனர் கே.பாலச்சந்தரின் டூயட் படத்தில் இவரது சாக்சபோன் இசை அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

கத்ரி கோபால்நாத் மறைவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்பட முக்கியப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More News >>