ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சிதம்பரம் முன்ஜாமீன் ரத்தாகுமா? டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்..
ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதிலளிக்குமாறு இருவருக்கும் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசிய நிறுவனமான மேக்ஸிஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், விதிமுறைகளை மீறி இந்த அனுமதியை அளித்ததாகவும், இதற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கிடைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் சிதம்பரமும், கார்த்தியும் முன்ஜாமீன் கோரி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு ஆகஸ்ட் 1ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இருவரையும் கைது செய்வதற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு அளிகக்கப்பட்ட இந்த முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி, அமலாக்கத் துறையினர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு இன்று நீதிபதி சுரேஷ்குமார் கைத் முன்பாக விசாரணைக்கு வந்தது. இம்மனுவுக்கு இருவரும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.