சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட 15 திபெத்தியர்கள் கைது..
சென்னையிலும், மாமல்லபுரத்திலும் சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட 15 திபெத்தியர்களை போலீசார் கைது செய்தனர்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் விடுதலை கோரி நீண்ட காலமாக சுதந்திரப் போராட்டம் நடைபெற்று வருகிறது. திபெத்தின் புத்தமத தலைவர் தலாய்லாமா, நேரு ஆட்சிக் காலத்திலயே இந்தியாவுக்கு வந்து தஞ்சமடைந்தார்.
இந்நிலையில், சீன அதிபர் எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த நாட்டில் வசிக்கும் திபெத்தியர்கள் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்துகிறார்கள். பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருந்தாலும் ஏதாவது ஒரு பகுதியில் அவர்கள் திரண்டு சீன அரசுக்கு எதிராக முழக்கமிடுவார்கள்.
மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதற்காக பகல் 1.30 மணியளவில் சீனஅதிபர் ஜின்பிங்க் வந்து சேருகிறார். இதையொட்டி, சென்னை முதல் மாமல்லபுரம் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும் பெங்களூருவில் இருந்து வந்த 2 பெண்கள் உள்பட 6 திபெத்தியர்கள், சென்னை விமான நிலையம் அருகே சீன அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதேபோல், சீன அதிபர் தங்கவிருக்கும் கிண்டி ஐடிசி சோழா ஓட்டலுக்கு அருகே 6 திபெத்தியர்கள், சீனர்களை போல் வந்து கோஷம் எழுப்பினர். அவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மாமல்லபுரத்தில் 3 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.