சீன அதிபர் ஜின்பிங்க் சென்னை வந்தார்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..
சீன அதிபர் ஷி ஜின்பிங்க் தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்திலும், கிண்டியில் அவர் தங்கும் ஐடிசி சோழா ஓட்டலிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இன்று மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக, சென்னை முதல் மாமல்லபுரம் வரை விழாக்கோலம் பூண்டுள்ளது.
பிரதமர் மோடி பகல் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்ைன வந்து சேர்ந்தார். அவருக்கு கவர்னர் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளத்திற்கு மோடி புறப்பட்டு சென்றார். அங்கு தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் என்ற நட்சத்திர ஓட்டலில் மோடி தங்குகிறார்.
இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங்க் பிற்பகல் 2.15 மணியளவில் தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் வரவேற்றனர். மேலும், பாரம்பரிய முறைப்படி மேளதாளம் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன காரில் கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலுக்கு சென்றார். ஓட்டல் அருகே இந்தியாவில் வசிக்கும் சீனர்களும், தமிழக மக்கள், மாணவ, மாணவியர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
அவர்கள் இந்திய தேசியக் கொடி மற்றும் சீன தேசியக் கொடிகளை ஏந்தியபடி உற்சாக கோஷம் எழுப்பினர்.
முன்னதாக, விமான நிலையம் முதல் கிண்டி ஓட்டல் வரை ஜிஎஸ்டி சாலையில் சில நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதே போல், ஓ.எம்.ஆர் சாலையில் மத்திய கைலாஷ் முதல் சோழிங்கநல்லூர் வரை சில நிமிடங்களுக்கு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.