சிறுமி ஹாசினி கொலையாளி தஷ்வந்துக்கு தூக்கு! - நீதிமன்றம் அதிரடி
நாட்டையே அதிரச் செய்த, சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்திற்கு மரண தண்டனை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த தஷ்வந்த் என்பவர் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தஷ்வந்தை சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியில் வந்த தஷ்வந்த் தனது தாய் பணம் கொடுக்காத காரணத்தால் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினான்.
மும்பையில் மீண்டும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்தை கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் தஷ்வந்தை ஆஜர்படுத்தியதை அடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த சில மாதங்களாக நடந்து வந்த ஹாசினி கொலை வழக்கின் விசாரணைகள் முடிந்துள்ளது. இது தொடர்பாக இறுதிக்கட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 363, 366, 354பி, 2012 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதித்து வேல்முருகன் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும், 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.