கோவளத்தில் தூய்மை இந்தியா.. அதிகாலையில் குப்பை அள்ளிய பிரதமர் மோடி..
பிரதமர் மோடி இன்று அதிகாலையில் கோவளம் கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளினார்.
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசும் நிகழ்ச்சி நேற்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில், கலைநிகழ்ச்சிகள், இரவு விருந்து போன்றவையும் இடம் பெற்றன. இரவு விருந்து முடிந்த பின்பு, சீன அதிபர் ஜின்பிங், சென்னையில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலுக்கு திரும்பினார். பிரதமர் மோடி அவரை வழியனுப்பி வைத்து விட்டு, கோவளத்திற்கு சென்றார்.
கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டலில் நேற்றிரவு பிரதமர் தங்கினார். இன்று அதிகாலை 6 மணியளவில் பிரதமர் மோடி, கோவளம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர், கடற்கரையில் கிடந்த தண்ணீர், குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்து, அதற்கான பைகளில் போட்டார். பிரதமர் எங்கு சென்றாலும் தூய்மை இ்ந்தியா திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று காலையில் அவர் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் பணியை தனது போட்டோகிராபர் மூலம் வீடியோ எடுத்து அதை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு்ள்ளார். மேலும், அதில், மாமல்லபுரத்தில் இன்று காலை தூய்மைப் பணியில் ஈடுபட்டேன். இந்த பணி அரை மணிநேரம் நடைபெற்றது. நான் சேகரித்த பிளாஸ்டிக் குப்பைகளை, ஓட்டல் ஊழியர் ஜெயராஜிடம் அளித்தேன்.
பொது இடங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்போம். நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருப்போம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.