தமிழர்களின் இதமான அன்பு எப்போதும் தனித்து நிற்கும்.. பிரதமர் மோடி நன்றி..

தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும் என்று பிரதமர் மோடி, ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங்க் ஆகியோரின் 2 நாள் முறைசாரா உச்சி மாநாடு இன்று முடிவுற்றது. சீன அதிபர் ஜின்பிங் புறப்பட்டு சென்றதும், பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு சீனமொழியிலேயே நன்றி தெரிவித்தார். அதைப் போல் ஆங்கில மொழியிலும், தமிழ் மொழியிலும் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழக மக்கள், மாநில அரசு மற்றும் கட்சிகள், அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் தமிழில் கூறியிருந்ததாவது:

நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி.

அழகிய மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய- சீன முறை சாரா உச்சி மாநாட்டிற்கு உறுதுணை புரிந்து உபசரிப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாச்சார அமைப்புகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

More News >>