மாமல்லபுரம் சந்திப்பு.. மோடி-ஜின்பிங்க் சிற்பம்..
மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்ததை குறிக்கும் வகையில் இருவரும் கைகுலுக்குவது போல் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சீன அதிபர் ஷி ஜின்பிங்க் 2 நாள் பயணமாக இந்தியா வந்தார். சென்னைக்கு நேரடியாக விசேஷ விமானத்தில் வந்திறங்கிய ஜின்பிங், கிண்டியில் உள்ள ஐ.டி.சி. ஓட்டலில் தங்கினார். அங்கிருந்து மாமல்லபுரம் சென்றார். அங்கு பிரதமர் மோடியும், அவரும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர்கள் பல்லவர் கால சிற்பங்கள், ஐந்து ரதம், கடற்கரைக் கோவில் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தனர்.
கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பின்னர், இருதரப்பு பேச்சுவர்த்தை நடைபெற்றது. இந்நிலையில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நினைவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் கைகுலுக்குவது போன்ற 2 கற்சிற்பங்களை சிற்பி பசுலுதீன் செதுக்கியுள்ளார். இரு நாட்டு தலைவர்களையும் கவுரவப்படுத்தும் வகையில் மாமல்லபுரம் திட்டக்குழுமம் சார்பில் 2 அடி உயரம், 2 அடி அகலத்தில் இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சிரித்துக் கொண்டு கைகுலுக்குவது போல் அமைக்கப்பட்ட இந்த கற்சிற்பம் 25 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களில் ஒன்று மாமல்லபுரம் மக்கள் சார்பில் இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் நேற்று சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொன்று மாமல்லபுரத்தில் வைக்கப்படும் எனத் தெரிகிறது.