தாத்தாக்கள் நாயகர்களாக நடிக்கும்போது, இளம் பெண்கள் நடிக்கக் கூடாதா? - நடிகை கஸ்தூரி காட்டம்

தாத்தாக்கள் நாயகர்களாக நடிப்பதை ஒப்புக்கொள்ளும் நாம், இளம் பெண்கள் திருமணம் ஆனதும் (நாயகிகளாக) ஒப்புக்கொள்வதில்லை? ஏன் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், நடிகர் நாகார்ஜுனின் மகனுமான நாக சைதன்யா மற்றும் முன்னணி நடிகை சமந்தா இருவருக்கும் திருமணம் சமீபத்தில் கோவாவில் நடந்து முடிந்தது.

இந்நிலையில், “திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன்” என்று சமந்தா தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்து இருக்கிறார். அது என்ன? நாகசைதன்யாவை இந்த கேள்வி ஏன் யாரும் கேட்கவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கஸ்தூரியின் இந்த பதிவிற்கு பதிலளித்த சினிமா ரசிகர் ஒருவர், “உங்களுடன் கூட நடித்த ரஜினியும் கமலும் இன்னும் நாயகனாக நடிக்கிறார்கள். உங்களால் முடியவில்லை அல்லவா… அந்த காரணம் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கஸ்தூரி, “ஆனால் ஏன்? அதுதான் என் கேள்வி. தாத்தாக்கள் நாயகர்களாக நடிப்பதை ஒப்புக்கொள்ளும் நாம், இளம் பெண்கள் திருமணம் ஆனதும் (நாயகிகளாக) ஒப்புக்கொள்வதில்லை? ஏன்? ஏன்? ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதற்கு பலரும் பலவிதமான பின்னூட்டங்கள் இட, முடிவில் கஸ்தூரி அவர்கள், “மனைவியின் காதல், கணவரின் தொழில் வாழ்வை பாதிக்குமா? ஏற்றத்தாழ்வுகளைக் காண முடிகிறதா? எதுவோ தவறாக உள்ளது. உண்மையில், பெண்கள் தங்கள் கணவர்களின்மேல் அவ்வளவு பிரியமாக இல்லை என்று நினைக்கிறேன். பல பெண்களுக்கு வேறு வழியில்லை என்று கருதுகிறேன். ஒரு மகளாகவோ, மனைவியாகவோ பெண்கள் சுதந்திரமாக இல்லை” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

More News >>