முஸ்லிம் வாக்குகளே எனக்கு தேவையில்லை.. பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை வீடியோ
முஸ்லிம் வாக்குகளே எனக்கு தேவையில்லை. நான் முஸ்லிம் வீட்டு வாசல்படி மிதிக்க மாட்டேன் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு பாஜக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ருத்ராபூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வான ராஜ்குமார் துக்ரல், ஒரு இந்து அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அப்போது அவர், எனக்கு முஸ்லிம் வாக்குகளே தேவையில்லை. நான் பக்ரீத் அன்று கூட முஸ்லிம் வீட்டு வாசல்படியை மிதிக்க மாட்டேன். முஸ்லிம்கள் முன்பாக ஒரு போதும் தலை வணங்க மாட்டேன்.
நான் உங்களால்(இந்துக்கள்)தான் அடையாளம் காட்டப்பட்டுள்ளேன். உங்களுக்குத்தான் தலை வணங்குவேன். நாம் உயிருடன் இருக்கும் வரை யாரும் இந்தியாவை பிரிக்க முடியாது என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
இதையடுத்து, பாஜக பொதுச் செயலாளர் அனில் கோயல் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை பாஜக செய்தி தொடர்பாளர் தேவேந்திர பாசின் தெரிவித்தார். ஒரு வாரத்திற்குள் ராஜ்குமார் துக்ரல் சரியான விளக்கம் தராவிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.