சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்
சீனாவை யாராவது பிரிக்க முயற்சித்தால், அவர்களின் எலும்புகள் சுக்குநூறாக்கப்படும். உடல்கள் நசுக்கப்படும் என்று ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மிரட்டல் விடுத்துள்ளார்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மக்கள் சுதந்திரம் கோரி ஜனநாயகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வார இறுதியில் இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி அடக்கினர்.
இந்த சூழ்நிலையில், இந்திய வருகையை முடித்து விட்டு நேபாளம் சென்ற சீன அதிபர் ஜின்பிங், அங்கு கூறுகையில், சீனப் பகுதியை யாராவது பிரிக்க முயன்றால், அவர்கள் அழிந்து போவார்கள். அவர்களின் எலும்புகள் சுக்குநூறாக்கப்படும். உடல்கள் நசுக்கப்படும். உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் சீனாவை யாராலும் பிரிக்க முடியாது. அப்படி முயற்சி செய்பவர்களை சீன மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்களை ஒதுக்குவார்கள் என்றார்.
ஜின்பிங் யாரையும் குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும், அவர் ஹாங்காங் போராட்டக்காரர்களைத் தான் கூறியுள்ளார். ஹாங்காங்கின் ஜனநாயக போராட்டத்தை ஒடுக்குவதில் சீனா முனைப்பாக உள்ளதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.