ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு.. தமிழகத்தில் 33 பேர் கைது.. என்.ஐ.ஏ. வெளியிட்ட தகவல்
தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் உள்பட நாடு முழுவதும் 14 மாநிலங்களில் மொத்தம் 127 பேர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) சார்பில், பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான 2 நாள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறப்பு படைகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி, ஐ.பி. முன்னாள் இயக்குனரும், தற்போதைய நாகலாந்து கவர்னருமான ஆர்.என்.ரவி, என்.ஐ.ஏ. டைரக்டர் ஜெனரல் யோகேஷ் சந்தர் மோடி, ஐ.ஜி. அலோக் மிட்டல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் அலோக் மிட்டல் கூறியதாவது: நாடு முழுவதும் 14 மாநிலங்களை சேர்ந்த 127 பேர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 33 பேர் தமிழ்நாட்டையும், 19 பேர் உத்தரபிரதேசத்தையும், 17 பேர் கேரளாவையும், 14 பேர் தெலுங்கானா மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளில் கைதானவர்கள், இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட சாஹரன்ஹாசிம், ஜாகீர் நாயக் ஆகியோரின் வீடியோக்களை பார்த்து ஐ.எஸ். இயக்கத்தின் ஆதரவாளர்களாக மாறியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், கைதான 127 பேர்களில் பெரும்பாலானவர்கள், இந்தியாவில் இருந்து தப்பியோடிய ஜாகிர் நாயக்கின் வீடியோக் களை பார்த்து ஐ.எஸ். ஆதரவாளர்களாக மாறியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஜாகிர் நாயக் மீதும், அவரது அமைப்பான இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.காஷ்மீரில் தீவிரவாத தலைவர்கள், பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அவர்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் மூலமாகவும், ஹவாலா பரிமாற்றத்தின் மூலமாகவும் பணம் வந்திருப்பது தெரியவந்துள்ளது.
சீக்கியர்கள் சிலர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாபில் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்நியநாட்டு சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்கின்றன. இவ்வாறு அலோக் மிட்டல் கூறினார்.
என்.ஐ.ஏ. டைரக்டர் ஜெனரல் யோகேஷ் சந்தர் மோடி கூறுகையில், பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்வதில் பாகிஸ்தானை போல் வங்கதேசமும் உருவாகி வருகிறது. வங்கதேசத்தின் ஜமாதுல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த பலர், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஊடுருவும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிவித்தார்.