தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட விவகாரம்.. சீமானுக்கு சம்மன்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக சீமானுக்கு விசாரணை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசு ஏற்பட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி, கடந்த ஆண்டு பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. கடந்தாண்டு மே 22ம் தேதியன்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் அப்போது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் வரை இறந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை கமிஷன் தற்போது தூத்துக்குடியில் செயல்பட்டு வருகிறது. இந்த கமிஷன் தற்போது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஒரு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், போராட்டம் நடைபெற்ற போது அங்கு சீமான் சென்று பேசியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, நாளை(அக்.16), விசாரணைக் கமிஷன் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது.

More News >>