பரீட்சையில் காப்பியடிப்பதை தடுக்க ஷு, சாக்ஸ் அணிய தடை!
பீகாரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தேர்வு அறைக்கு ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக அளவு மாணவர்கள் காப்பியடிப்பதாகவும், முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், 1,000 மாணவர்கள் பிடிபட்டனர்.
அதுபோலவே போலி தேர்வு கண்காணிப்பாளர்கள் 24 பேரும் சிக்கினர். அதைவிட, கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு 42 வயது என்பது பின்னர் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.
அங்கு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மாணவர்கள் காப்பியடிப்பதைத் தடுக்க “ஷு மற்றும் சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்படுவதாகவும், செருப்பு மட்டுமே அணிந்து தேர்வு அறைக்குள் வர அனுமதிக்கப்பட்டு உள்ளதாக”வும் பள்ளி தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.