இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்தவர் சாய் தன்ஷிகா. அதற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்தாலும் ரஜினியின் மகளாக நடித்தபிறகு தன்ஷிகாவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்தது. சமீபத்தில் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார்.
முன்னதாக அவர் தர்பார் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். அப்போது சாய்தன்ஷிகா அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இதுபற்றி சாய் தன்ஷிகா கூறும்போது,'கபாலி படத்துக்கு பிறகு எனது திரையுலக வாழ்க்கை பிரகாசமானது. அப்படத்தில் ரஜினிசாரின் மகள் யோகி வேடம் ஏற்று நடித்திருந்தேன். அந்த பெயர் சொல்லி ரசிகர்களும் என்னை அழைக்கின்றனர். ரஜினியின் மகளாக நடித்ததால் என்னுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ஆசைப்படுகிறார்கள்.
தற்போது யோகி டா பெயரில் புதிய படம் நடிக்கிறேன். இதுபற்றி ரஜினிசாரை சந்தித்து தெரிவித்து அவரது ஆசி வாங்க எண்ணினேன். சமீபத்தில் நான் அஜ்மீர் தர்காவுக்கு சென்றேன். அப்போது ஜெயப் பூரில் தர்பார் படப்பிடிப்பு நடப்பதை அறிந்தேன். உடனே அங்குசென்று ரஜினிசாரை சந்தித்து ஆசி பெற்றேன். யோகி டா படத்தில் நடிப்பதுபற்றி அவரிடம் கூறியபோது பாராட்டு தெரிவித்துடன் புன்னகையுடன் வெற்றிக்கு வாழ்த்து கூறினார்.