பிக்பாக்கெட் போல் திசை திருப்புகிறார்.. மோடி மீது ராகுல் பாய்ச்சல்
பிக்பாக்கெட் அடிப்பவர் மக்களின் கவனத்தை திசைதிருப்புவது போல், பிரதமர் மோடி முக்கிய விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புகிறார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பேசும் போது, ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்தனர். மோடி நேற்று அரியானாவில் பேசும் போது, பாங்காக், வியட்நாம் செல்கிறவர்கள்.. என்று மறைமுகமாக ராகுல்காந்தி தனிப்பட்ட பயணம் செல்வதை கிண்டலடித்தார்.
இதற்கு பதிலடியாக ராகுல்காந்தியும் பிரதமரை கடுமையாக விமர்சிக்கிறார். அவர் நேற்று மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
அதானி, அம்பானி உள்ளிட்ட குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் லவுடு ஸ்பீக்கராக பிரதமர் மோடி செயல்படுகிறார். பிக்கெட் பாக்கெட் அடிப்பவர் மக்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு பணம் அடிப்பது போல், பிரதமரும் மக்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு பணத்தை கொடுக்கிறார். ஒரே தருணத்தில் ரூ.1.25 லட்சம் கோடி கார்ப்பரேட் வரிச் சலுகை அளிக்கிறார். ஆனால், ஏழைகளுக்கு உதவும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு வெறும் 35 ஆயிரம் கோடிதான் கொடுக்கிறார். பாரத் பெட்ரோலியத்தை அடுத்து துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள் என்று பொதுச் சொத்துக்களை எல்லாம் தனியாருக்கு தாரை வார்க்கிறார்.
பிரதமர் தினம்தினம் அரசியல்சட்டப்பிரிவு 370 ரத்து பற்றியே பேசுகிறார். விவசாயிகளின் பிரச்னைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாதது போன்றவற்றை பற்றி பேசாமல் தவிர்க்கிறார். பதிலளிக்க முடியாத கேள்விகளை எல்லாம் அவர் தவிர்த்து விட்டு செல்கிறார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டியும், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களை நசுக்கி விட்டன. ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழைகளிடம் பணம் இருந்தால்தான் அவர்கள் பொருட்களை வாங்குவார்கள். அப்படி வாங்கினால்தான் உற்பத்தி பெருகும். பொருளாதாரம் வளரும். ஆனால், இதை செய்ய மோடி அரசு தயாராக இல்லை.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.