சோனியா காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு..

கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இன்று டெல்லியில் சோனியாவை சந்தித்து பேசினார்.

கர்நாடகாவில் கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்ற போதும் அதற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதனால், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமிக்கு முதல்வர் பதவி அளித்து, காங்கிரஸ் அக்கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால், குமாரசாமிக்கு எதிரியாக விளங்கிய காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு மந்திரி பதவி தரப்படவில்லை. அவரும் முதல்வர் பதவியில் இருந்து விட்டதால், மந்திரி பதவியேற்க விரும்பவில்லை. ஆனால், மறைமுகமாக அந்த கூட்டணி அரசுக்கு தொல்லை கொடுத்து வந்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் வரை அதிருப்தியாகி பதவியை ராஜினாமா செய்து, பாஜக பக்கம் சென்றனர். இதனால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. இதற்கிடையே, குமாரசாமி ஆட்சியை காப்பாற்ற முயன்று தோற்று போன முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார், அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்த பரமேஸ்வராவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது வீடு மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சமீபத்தில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தி ரூ.4 கோடிக்கு மேல் கைப்பற்றினர்.

இந்த சூழ்நிலையில், குமாரசாமி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு திரைமறைவு வேலை பார்த்ததாக கருதி கட்சியில் ஒதுக்கப்பட்டிருந்த சித்தராமையாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. அவரை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய கட்சித் தலைவர் சோனியா உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையா பொறுப்பேற்றார். இப்பதவி அமைச்சர் பதவிக்கு நிகரானது. இதனால், தற்போது கர்நாடக காங்கிரசில் சித்தராமையாவின் கோஷ்டி மீண்டும் பலமடைந்துள்ளது.

இந்நிலையில், சித்தராமையா இன்று காலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார். இதன்பின், சித்தராமையா கூறுகையில், கர்நாடகாவில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சோனியாவிடம் பேசினேன். சந்திப்பு சுமுகமாக இருந்ததுஎன்று தெரிவித்தார்.

More News >>