சீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
சீமான் என்ன யோக்கியனா? அவர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூல் செய்வது எங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறாரா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதே சமயம், ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் பேசியது கடும் கண்டனத்துக்குரியது. தமிழன் எதிரியை கூட கொல்லமாட்டான். எதிரியாக இருந்தால் கூட அடைக்கலம் கொடுக்க கூடியவன் தமிழன். ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்றோம் நாங்கள்தான் புதைத்தோம் என்று சீமான் பேசுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சீமான் மீது மத்திய உளவுத் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் பிரதமரை நாங்கள்தான் கொன்றோம் என்று சொல்வது தமிழர்களின் மானம், மரியாதை மீது களங்கத்தை மீண்டும் சுமத்துவதற்காக விடுக்கப்பட்ட சவால். இதை துடைக்க வேண்டும் என்று சொன்னால் சீமான் போன்றவர்களை தண்டிக்க வேண்டும். சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழ்களிடமும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும் பணத்தை வாங்கிக்கொண்டு சீமான் அரசியல் நடத்தி வருகின்றார்.
எந்த தமிழரும் ராஜீவ்காந்தி படுகொலையை ஆதரிக்கவில்லை. தமிழன் என்று சொல்லிக்கொள்ள சீமான் வெட்கப்பட வேண்டும். சீமான் மீது தமிழக அரசும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும். தமிழக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் குறை சொல்ல சீமானுக்கு என்ன தகுதி உள்ளது? 10 வருடமாக வாடகை கொடுக்காமல் வீட்டை காலி செய்யாத சீமான் ஒன்றும் யோக்கியன் கிடையாது. வெளிநாடுக்ளுக்கு சென்று பணம் வசூல் செய்வது எல்லாம் எங்களுக்கு தெரியாது என்று சீமான் நினைக்கிறாரா?
இவ்வாறு அவர் கூறினார்.