ரஜினி, கமல் சந்திப்பு ஓவர் பில்டப் - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ரூஸ்வெல்ட் - வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்புபோல ரஜினி-கமல் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசியபோது இருவரும் இது நட்பு ரீதியான சந்திப்பு என்றனர். மேலும், கமல்ஹாசன், மதுரையில் கட்சி பெயர், கொடி அறிமுக விழாவில் அழைத்துள்ளதாகவும், தனது அரசியல் பணி சிறக்க ரஜினிகாந்த் வாழ்த்தியதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நேற்று ‘தமிழ்த் தாத்தா’ எனப்படும் உ.வே.சாமிநாத அய்யரின் 164-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாநிலக் கல்லூரியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “3,087 கைப்பிரதிகள், ஓலைச்சுவடிகளைச் சேகரித்து தமிழுக்குத் தொண்டாற்றியவர் உ.வே.சாமிநாதய்யர்” என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்.

பின்னர் ரஜினி, கமல் சந்திப்பு குறித்து கேட்டபோது, “ரூஸ்வெல்ட் - வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்புபோல ரஜினி-கமல் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது. ரஜினி-கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப்போவதில்லை” என்று தெரிவித்தார்.

More News >>