சவுதியில் பயங்கர விபத்து.. பஸ் தீப்பிடித்து 35 பேர் பலி.. இந்திய பிரதமர் மோடி இரங்கல்..
சவுதி அரேபியாவில் கனரக வாகனத்தின் மீது படுவேகமாக வந்து மோதிய டீலக்ஸ் பஸ் தீப்பற்றியது. இந்த விபத்தில் 35 பேர் உடல் கருகி பலியாயினர்.
சவுதி அரேபியாவில் ஆசியா மற்றும் அரேபியாவைச் சேர்ந்த முஸ்லிம் பயணிகள் புனிதப்பயணம் சென்றனர். அவர்கள் சென்ற டீலக்ஸ் பஸ், மெக்காவுக்கும், மதீனாவுக்கும் இடையே ஹிஸ்ரா சாலையில் சென்று கொண்டிருந்த போது கனரக வாகனம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்ஸின் டீசல் டேங்க் வெடித்ததாக தெரிகிறது. இதனால், பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த பயங்கர விபத்தில் 35 பேர் உடல் கருகி பலியாயினர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அல் ஹம்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சவுதி இளவரசர் பைசல் பின் சல்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, இந்தியப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்்ளார்.
ஏற்கனவே சவுதியில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பஸ்சும், எரிபொருள் கன்டெய்னர் லாரியும் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.