அதிமுக தொடக்க விழா.. எடப்பாடி, ஓ.பி.எஸ் பங்கேற்பு..
அதிமுகவின் 48வது ஆண்டு விழா இன்று அக்கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மாலை அணிவித்தனர்.
அதிமுக கட்சி கடந்த 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதியன்று எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. அதன்படி, அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா, இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது. மாவட்டக் கட்சி அலுவலகங்களில் கொடிகள் ஏற்றியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 48-வது ஆண்டு தொடக்க விழா இன்று காலை நடந்தது. கட்சி அலுவலகத்தின் முன்புறம் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர். பின், இருவரும் சேர்ந்து அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.