டெல்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு.. அபராதம் ரூ.4 ஆயிரம்..
டெல்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு திட்டம் நவம்பர் 4ம் தேதி அமலுக்கு வருகிறது. விதிகளை மீறும் வாகனங்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. டெல்லியில்் காற்று மாசு அதிகமாக காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016ம் ஆண்டில் முதல்வர் கெஜ்ரிவால் ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி, ஒற்றைப்படை பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டும் சில கிழமைகளிலும், இரட்டைப் படை பதிவெண் கொண்ட வாகனங்கள் மற்ற கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்ற வாகனக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது. இதன்பின், இத்திட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், இந்த திட்டம் வரும் நவம்பர் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரை மீண்டும் அமல்படுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று அறிவித்தார். ஒற்றைப் படை பதிவெண் வாகனங்களுக்கான நாட்களில், இரட்டைப் படை பதிவெண் வாகனங்கள் வந்தால் அபராதமாக ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்படும். இதேபோல், இரட்டைப்் படை வாகனங்களுக்கான நாட்களில் வரும் ஒற்றைப்படை பதிவெண் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த வாகனக் கட்டுப்பாடு டூ வீலர்களுக்கு பொருந்தாது. பயணிகள் பஸ்கள் தவிர இதர நான்கு சக்கர வாகனங்களுக்கு பொருந்தும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கும் பொருந்தும். அதே சமயம், சீருடை அணிந்த பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.