அறிக்கை விட்டு சிபிஐ-யிடம் சிக்கிய தொழிலதிபர் - ரூ.4,232 கோடி மோசடி செய்தது அம்பலம்

5 வங்கிகளில் ரூ.4,232 அளவிற்கு கடன் மோசடி செய்தது தொடர்பாக ரோடோமேக் நிறுவன தலைவர் விக்ரம் கோத்தாரியை சிபிஐ கைது செய்துள்ளது.

குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 600 கோடியை மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடித்தார். சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் அவரைத் தற்போது தேடிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ரோடோமேக் பெண்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, 5 பொதுத்துறை வங்கிகளில் 4,232 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

கான்பூரில் உள்ள கோத்தாரியின் தலைமை அலுவலகம் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்டிருப்பதாகவும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஓராண்டுக்கு முன்னதாக அலகாபாத் வங்கியிடமிருந்து 352 கோடி ரூபாயும், யூனியன் வங்கியிடமிருந்து 485 கோடி ரூபாயும் பெற்றுள்ள கோத்தாரி, வாங்கிய கடனையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிபிஐ விக்ரம் கோத்தாரி மீது வழக்குப்பதிவு செய்தது. கான்பூரில் விக்ரம் கோத்தாரியின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 3 இடங்களில் சோதனையும் நடத்தியது.

இந்நிலையில், தான் வெளிநாடு தப்பவில்லை; கான்பூரில்தான் இருக்கிறேன் என்று விக்ரம் கோத்தாரி தரப்பில் அறிக்கை வெளியாகவே, விரைந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் திங்கட்கிழமையன்று கைது செய்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவரைக் கைது செய்ததாக கூறியிருக்கும் சிபிஐ அதிகாரிகள், விக்ரம் கோத்தாரி, அவரது மனைவி மற்றும் மகனிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

இதனிடையே விக்ரம் கோத்தாரி, மொத்தமாக ரூ. 4 ஆயிரத்து 232 கோடி ரூபாய் அளவிற்கு கடன் மோசடி செய்து இருக்கிறார் என்று புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

More News >>