தளபதி விஜய் -கார்த்தி 25ம்தேதி மோதல்.. தீபாவளிக்கு வசூலை குவிக்கப்போவது பிகிலா. கைதியா...
கால்பந்தாட்ட பயிற்சியாளர், தாதா என இரண்டு கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் பிகில். நயன்தாரா ஹீரோயின். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். அட்லி இயக்கியுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் இணைய தளத்தில் பெரிய வரவேற்பு பெற்றது.
படம் ரிலீஸ் தேதி தணிக்கை சான்று போன்றவற்றிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தணிக்கையில் இப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் தரப்பட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று பட நிறுவனம் அறிவித்திருந்தது.
தீபாவளி வரும் 27ம் தேதி ஞாயிற்றுகிழமை வருகிறது. வழக்கமாக புதிய படங்கள் வெள்ளிக் கிழமைகளில் ரிலீஸ் செய்யப்படுவதால் இப்படம் வெள்ளிக்கிழமை வருமா, ஞாயிற்றுகிழமை வெளியாகுமா என்ற குழப்பம் இருந்துவந்தது. அந்த குழப்பத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி போக்கியிருக்கிறார். 'உலகம் முழுவதும் பிகில் 25ம் தேதி ரிலீஸ் ஆகிறது' என குறிப்பிட்டிருக்கிறார். அதாவது தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே பிகில் ரிலீஸ் ஆகிறது.
அதேபோல் தீபாவளிக்கு வெளியாகும் என்று கார்த்தி நடித்திருக்கும் கைதி படம் பற்றியும் தகவல் வெளியாகியிருந்தது. இப்படத்தை மாநகரம் பட இயக்குனரும், விஜய் நடிக்கும் 64வது படத்தை இயக்குபவருமான லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.கைதி படத்துக்கு தணிக்கையில் யூ/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. இப்படமும் பிகில் வெளியாகும் அதேநாளில் அதாவது தீபாவளிக்கு 2 நாள் முன்னதாக 25ம் தேதி வெளியாகும் என்று படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
பிகில், கைதி தீபாவளியையொட்டி இரண்டு நாட்களுக்கு முன்னதாக 25ம்தேதி திரைக்கு வருவதுடன் வேறு புதிய படம் எதுவும் போட்டிக்கு இல்லாததால் இரண்டு படங்களில் வசூலை அள்ளிக் குவிக்கப்போவது எந்த படம் என்பதை விநியோகஸ்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர்.