கல்கி பகவான் கம்பெனிகளில் ரூ.500 கோடி வரி ஏய்ப்பு.. ரூ.100 கோடி பணம், நகை பறிமுதல்
கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் அவரது மகன் கம்பெனிகளில் சுமார் ரூ.500 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித் துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், நூறு கோடிக்கு பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வரதைப்பாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. மேலும், ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் உள்ளன. கல்கிபகவான் என்ற இந்த சாமியாரின் இயற்பெயர் விஜயகுமார் நாயுடு.
சென்னையில் வசித்தவர். இவரது மகன் கிருஷ்ணா, ஆந்திராவில் ஒன்னஸ் டெம்பிள் என்ற பெயரில் ஆன்மீகப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி, ஒயிட் லோட்டஸ், கோல்டன் லோட்டஸ், புளூ வாட்டர், ட்ரீம் வியூ போன்ற பல கட்டுமான நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்கள் மற்றும் ஆசிரமங்களில் பல கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தகவல் வரவே வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினர்.
ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழகத்தில் சென்னை உள்பட நாடு முழுவதும் அந்த ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 16ம் தேதி அதிகாலை முதல் 3 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினார்கள். இன்று (அக்.18) முடிவுற்ற இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.33 கோடி, ரூ.18 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், ரூ.26 கோடி மதிப்பிலான 88 கிலோ தங்கம் மற்றும் ரூ.5கோடி மதிப்பிலான வைரம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ.93 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் ஆசிரமம் மற்றும் கிருஷ்ணாவின் கம்பெனிகளில் சுமார் ரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.