ஆந்திரா முதல் அமெரிக்கா வரை.. கல்கி பகவான் சேர்த்த சொத்துகள்.. வருமான வரி அதிகாரிகள் அதிர்ச்சி
கல்கி பகவான் ஆசிரமங்கள் மற்றும் அவரது மகன் கிருஷ்ணாவின் கம்பெனிகளில் 3 நாட்களாக ரெய்டு நடத்திய வருமானவரி அதிகாரிகள் அவற்றின் சொத்துக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கல்கி பகவான் ஆசிரமங்கள் மற்றும் அவரது மகன் கிருஷ்ணா நடத்தும் கம்பெனிகளில் கடந்த 3 நாட்களாக வருமான வரித் துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். இதில், ரூ.409 கோடி நன்கொடைகளுக்கு ரசீதுகள் தரப்பட்டிருப்பதும், ஆனால் அவை வருமான வரி துறைக்கு கணக்குகள் காட்டப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், ரூ43.90 கோடி ரொக்கம், 25 லட்சம் அமெரிக்க டாலர்(ரூபாயில் 18கோடி), 88 கிலோ நகைகள்(மதிப்பு ரூ.26 கோடி), 1271 கேரட் வைரங்கள்(மதிப்பு ரூ.5 கோடி) மற்றும் பல சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை பல சொத்துகள் இருப்பதை ஆவணங்கள் மூலம் பார்த்து தெரிந்து கொண்ட வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பல டிரஸ்ட்கள், ஒயிட் லோட்டஸ், கோல்டன் லோட்டஸ், ட்ரீம் வியூ, புளூ வாட்டர் ஆகிய கட்டுமான நிறுவனங்கள் உள்பட கம்பெனிகளை கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா நடத்தி வருகிறார். அத்தனை கம்பெனிகளிலும் வருமான வரி ஏய்ப்புகள் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
கல்கி பகவான் யார்? கல்கி பகவான் என்ற இந்த 70 வயது சாமியார், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள உலநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர். விஜய்குமார் நாயுடு என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஆரம்பத்தில் எல்.ஐ.சி.யில் கிளார்க் வேலை பார்த்தார். அதன்பிறகு, ஜே.கே. என்றழைக்கப்படும் தத்துவ அறிஞர் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ நூல்களைப் படிக்கத் தொடங்கினார். பின்னர், 1980ல் திருவள்ளூர் மாவட்டம் நேமம் என்ற இடத்தில் ஒரு ஆசிரமத்தை தொடங்கினார்.
தானே விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கி பகவான் என்று சொல்லிக் கொண்டார். பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரவே ஆன்மீகப் பல்கலைக்கழகம் தொடங்கினார். ஆனால், தமிழகத்தில் அவருக்கு பல எதிர்ப்புகள் எழுந்ததால், ஆந்திராவுக்கு போய் விட்டார். சித்தூர் மாவட்டம், வரதையாபாளையத்தில் ஆசிரமத்தை தொடங்கினார். அதன்பிறகு, வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். பணம் கொட்டியது. ஒன்னஸ் ஆன்மீகப் பல்கலைக்கழகத்தை தொடங்கினார். தற்போது இவரை தனியாக சந்தித்து ஆசி வாங்க வேண்டுமென்றால் ரூ.50 ஆயிரம் கட்ட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இவரது மனைவி புஜ்ஜம்மாவும் தன்னை அம்மா பகவானாக சொல்லிக் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
தற்போது வருமான வரித் துறையிடம் கல்கி பகவான் ஆசிரமங்கள் சிக்கியதும் அவரைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் அடுத்தடுத்து பல கதைகள் வந்து கொண்டிருக்கின்றன.