காங்கிரசுக்கு தேசப்பற்றை பாஜக சொல்லித் தருவதா? ஆனந்த் சர்மா கொதிப்பு..
தீவிரவாதத்தை எதிர்த்த நடவடிக்கைகளால் 2 பிரதமர்களை இந்த நாட்டுக்கு தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். எங்களுக்கு தேசப்பற்றை பாஜக போதிக்க வேண்டாம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. மும்பையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது:
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை வைத்து, மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு பிரதமர் மோடி அரசியல் செய்கிறார். அந்த பிரிவை ரத்து செய்வதை காங்கிரஸ் எதிர்த்ததாகவும், அதனால் காங்கிரசுக்கு தேசப்பற்று இல்லை என்றும் பாஜக பொய் பிரச்சாரம் செய்கிறது.
பிரிவு 370 தற்காலிகமானது என்று அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. அந்தப் பிரிவை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும். ஆனால், ஆக.5ம் தேதி நடந்த விவாதத்தில் அதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. காஷ்மீர் மாநிலத்தைப் பிரிப்பதற்குத்தான் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. காஷ்மீரைப் பிரிப்பதற்குத்தான் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.
காங்கிரசுக்கு தேசப்பற்றைப் பற்றி பாஜக போதிக்கத் தேவையில்லை. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளால் இந்த நாட்டிற்கு 2 பிரதமர்களை(இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி) தியாகம் செய்துள்ளது காங்கிரஸ்.
இந்தியாவின் பார்வையில் வரலாற்றை திருத்தி எழுத வேண்டுமென்று அமித்ஷா கூறுகிறார். வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது. வீரசாவர்க்கருக்கு பாரத் ரத்னா கொடுக்கப் போவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. வாஜ்பாய் ஆட்சியில் இருந்த போது ஏன் தரவில்லை? கடந்த ஐந்தரை ஆண்டு கால மோடி ஆட்சியில் ஏன் தரப்படவில்லை? இதெல்லாம் மக்களுக்கு தெரியும். காந்தியின் 150வது ஆண்டு பிறந்த விழாவை கொண்டாடுவதாக பாஜக ஏமாற்று வேலை செய்கிறது. இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.