முஸ்லிம்களை இழிவுபடுத்திய ராஜேந்திர பாலாஜியை நீக்க பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தல்..
தன்னிடம் மனு அளிக்க வந்த முஸ்லிம்களை இழிவுபடுத்தியதாகக் கூறி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்றும் கோரியள்ளன.
நாங்குநேரி தொகுதியில் களக்காடு அருகே கேசவநேரி என்ற கிராமத்தில் ரேஷன் கடை அமைக்கக் கோரி, இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து மனுவை வாங்காத அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நீங்கள்(முஸ்லிம்கள்)தான் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே, பிறகு எதற்கு மனு கொடுக்கிறீர்கள்? வெறும் 6 சதவீத வாக்குகளை மட்டும் வைத்து கொண்டு என்ன செய்ய முடியும்? என்று பதிலளித்தாக கூறப்படுகிறது.
மேலும், மனுவை அவர் கிழித்து போட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இதையடுத்து, ராஜேந்திர பாலாஜிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சரின் நாகரீகமற்ற பேச்சு இஸ்லாமியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, மோடியா? லேடியா? என்று கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டார். அவர் மோடியை எதிர்த்த ஒரே காரணத்திற்காக அதிகபட்சமான இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களித்து அதன் காரணமாக அதிமுக பெரும்பான்மை இடங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதே போல், 2016ம் ஆண்டு தேர்தலிலும் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற்றே, அதிமுக பெரும்பான்மையை அடைந்தது. இந்த வரலாற்றை எல்லாம் மறந்து விட்டு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகிறார்.
பாஜகவோடு உறவை வைத்ததால் இழந்து விட்ட இஸ்லாமியர்களின் ஆதரவை மீண்டும் பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிமுக தலைமையில் உள்ளவர்கள் நினைக்கும் நிலையில், ஒட்டுமொத்த சிறுபான்மையினரையும் இழிவுபடுத்தியது மட்டுமின்றி பல சர்ச்சைக்குரிய பேச்சுக்களை தொடர்ந்து பேசி வரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுகவை சவக்குழிக்கு அனுப்பும் வேலையைச் செய்து வருகின்றார்.
விறுப்பு வெறுப்பின்றி செயல்படுவேன் என்று உறுதிமொழி எடுத்து பதவியேற்று அரசியலமைப்பு சாசன சட்டத்திற்கு எதிராக சிறுபிள்ளைத்தனமாக பேசியுள்ள அமைச்சரின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி பொதுச்செயலாளரான எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள் அறிக்கையில், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னிடம் மனு அளிக்க வந்த இஸ்லாமியர்களிடம், காஷ்மீர் போல உங்களை ஒதுக்கி வைக்கனும் என்று திமிராக பேசியிருக்கிறார். யாரிடம் பேசுகிறோம்? என்ன பேசுகிறோம்? என்பது கூட தெரியாமல் அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவருக்கு நாவடக்கம் தேவை. அவரது பேச்சு, அதிமுகவின் கொள்கைக்கும், நெறிமுறைகளுக்கும் எதிரானது என்பதால், அவரை அதிமுக தலைமை கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அளித்த பேட்டியில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. சிறுபான்மையினரை இழிவுபடுத்தி அவர் பேசியதும், காஷ்மீரை போல் முஸ்லிம்களை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று கூறியதும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை அவரே உருவாக்குவதாக உள்ளது. எனவே, அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “அரசமைப்பு சட்டத்தின் பேரில் உறுதியெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள், அனைவருக்குமாக செயல்பட வேண்டும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல. அதில் உள்நோக்கம் உள்ளது. அவர் பேசியது உண்மை என்றால் அமைச்சரவையில் தொடரும் தகுதியை இழந்துவிட்டார். முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அமைச்சர் மீது விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், மதுரை தெற்குவாசல் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, மதுரை மாவட்டத்தலைவர் முஜிபுர் ரஹ்மான் கூறுகையில், ''நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முஸ்லிம்கள் பற்றி மிக மோசமாகவும் மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பேசியுள்ளார். பி.ஜே.பியின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முஸ்லிம்களிடம் மனுவை வாங்க மறுத்ததோடு மிரட்டும்படி பேசியது கடும் கண்டனத்திற்குரியது. அவர் உறுதியேற்ற அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்தப் பேச்சுக்கு முஸ்லிம்களிடத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ராஜேந்திர பாலாஜி மீது தமிழக அரசும், அ.தி.மு.க தலைமையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.