கிருஷ்ணரை இழிவுபடுத்திய காரப்பனுக்கு பாஜக கண்டனம்.. கைது செய்ய நாராயணன் வலியுறுத்தல்
கிருஷ்ணரையும், அத்திவரதரையும் இழிவுபடுத்தி பேசிய கைத்தறி ஆலோசனை குழு உறுப்பினர் காரப்பனை கைது செய்ய வேண்டுமென்று தமிழக அரசை, பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் காரப்பன். காரப்பன் சில்க்ஸ் என்ற கடையின் உரிமையாளர். கோவையில் செப்.29ல் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில், காரப்பன் பேசும் போது, அத்திவரதர் மற்றும் கிருஷ்ணர் குறித்து அவதுாறாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகி, இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரப்பன் பேசும் போது, இன்ஜினியரிங் படிப்பில் மகாபாரதத்தை வைத்துள்ளனர். இப்ப இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்கவா போகிறது என்று நினைத்து மகாபாரதத்தை பாடமாக வைத்துள்ளனர். பாஞ்சாலிக்கு சேலை கட்டிய கிருஷ்ணர் எந்த தறியில் அந்த சேலையை நெய்தார்? அவன் ஒரு பொம்பள பொறுக்கி...
ஆற்றிலுள்ள மணலை எண்ணினாலும் எண்ணலாம். கிருஷ்ணரின் மனைவிகளை எண்ண முடியாது. இதையெல்லாம் மக்கள் ரசித்து கேட்கின்றனர். சமீபத்தில் ஒரு பரதேசி அத்திவரதர் என்று... 48 நாட்கள் காஞ்சிபுரத்தில் உள்ள நெசவாளர்களின் வாழ்க்கையே நாசமாகி விட்டது... என்று மோசமான வார்த்தைகளை கூறியிருக்கிறார். இதற்கு தற்போது பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இது குறித்து, பாஜக மூத்த செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
காரப்பன் என்ற கோவையை சார்ந்த ஒரு நபர் கடவுள் கிருஷ்ணரை பொறுக்கி என்றும், அத்திவரதரை பரதேசி என்றும் தரம் தாழ்ந்து பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த காரப்பனை மத்திய கைத்தறி ஆலோசனை குழு உறுப்பினராகவும், மத்திய கைத்தறி மேம்பாட்டு மைய பயிற்சியாளராகவும் மத்திய அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திறமையின் அடிப்படையில் அவரை நியமித்திருப்பதாக பல்வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.
திறமையின் அடிப்படையில் அவர் நியமிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பான்மையினரின் நம்பிக்கைகளை சிதைக்கும் வண்ணம் அவர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியிருப்பது, மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பது பெரும் குற்றமே. திறமை இருப்பவர்களெல்லாம் நல்லவர்களாகி விட முடியாது. திறமை மட்டுமே ஒரு சமுதாய மேன்மைக்கு உதவாது.
தரம் தாழ்ந்த எண்ணங்களும், தீய கருத்துக்களும் கொண்டவர்கள் முற்றிலும் கண்டிக்கப்பட, தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இந்து மத உணர்வுகளை புண்படுத்தி பேசுவது என்பதை வாடிக்கையாக்கி கொள்ள முயலும் தீய சக்திகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்று தர வேண்டியது தமிழக அரசின் கடமை. காரப்பன் கைது செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.