அஜீத் வாழ்க்கை வரலாறு இயக்க டைரக்டர் சிவா ரெடி.. தன்னம்பிக்கை டைட்டிலும் தயார்...
தல அஜித்குமார் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என 4 படங்களை இயக்கியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சிவா. இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தை சிவா இயக்க உள்ளார். இது கிராமத்து பின்னணியிலான குடும்ப கதையாக உருவாகவிருக்கிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகுவேட்டி சட்டை அணிந்து ரஜினி நடிக்க உள்ளதாக தெரிகிறது.
அஜீத்துக்கு அடுத்தடுத்து 4 ஹிட் படங்களை அளித்த சிவா மீண்டும் அவர் படத்தை இயக்குவது எப்போது என்று ரசிகர்கள் கேட்ட வண்ணமிருக்கின்றனர். கடைசியாக இவர்களது கூட்டணியில் வந்த விஸ்வாசம் படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வசூல் ரஜினி நடித்த பேட்ட படத்தின் வசூலை மிஞ்சியதாக தகவல் வந்தது. அதுபோல் ஒரு வசூல் சாதனை படத்தை தர வேண்டும் என்பதாலேயே சிவாவுக்கு தான் நடிக்கும் படத்தை இயக்க ரஜினி வாய்ப்பு அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சிவாவிடம் ஒரு பேட்டியில், அஜித்தின் வாழ்க்கை வரலாற்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் படத்துக்கு என்ன டைட்டில் வைப்பீர்கள் என கேட்டபோது தன்னம்பிக்கை என டைட்டில் வைப்பேன் என்று கூறியிருக்கிறார் சிவா.
அஜீத்தின் வாழ்க்கையை படமாக்கும் நோக்கத்துடன் அவரது வாழ்க்கை சம்பவங்களை சிவா தொகுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அஜீத் அனுமதி தருவாரா என்பதுதான் தெரியவில்லை.